சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை ரிப்பன் கட்டட அலுவலக தலைமையிடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டு பின் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இன்று அவற்றை ஆய்வு செய்தார். மேலும் அவர் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கிண்டி கதிப்பாரா மற்றும் ஜி.பி. சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாநகராட்சி பணியாளர்களால் மழைநீர் வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின் அவர், “மழையின் காரணமாக மழைநீர் தேக்கம் காணப்படும் இடங்கள், தாழ்வான பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மழைநீர் தேக்கம் ஏற்படுவதற்கான வழிகள் மற்றும் காரணங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து, வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக அவற்றைச் சரிசெய்யத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனக் கூறினார்.
“மழைநீர் தேங்காத வகையில் பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்திய அவர், “கடந்த 24 மணி நேரத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சராசரியாக 10.3 செ.மீ. மழை பெய்துள்ளது. சில இடங்களில் குறிப்பாக ஆலந்தூர், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் போன்ற இடங்களில் 14, 15 மற்றும் 16 செ.மீ. மழையும் பெய்துள்ளது. இருந்த போதிலும் பெரிய அளவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை. சில இடங்களில் நீர்த்தேக்கம் காணப்பட்டது. சுமார் 83 இடங்களில் மழைநீர் தேக்கம் உள்ளதாகப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது” என கூறினார்.
மேலும் அவர், “தற்பொழுது 25 இடங்களில் மோட்டார் பம்புகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீர்த்தேக்கங்கள் விரைவில் சரிசெய்யப்படும். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வகையில் 260 நீர் இறைக்கும் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியின் 16 சுரங்கப் பாதைகள், நெடுஞ்சாலைத் துறையின் 6 சுரங்கப்பாதைகள் என மொத்தம் 22 சுரங்கப் பாதைகளில், கணேசபுரம் சுரங்கப்பாதையைத் தவிர்த்து, 21 சுரங்கப் பாதைகள் மழைநீர்த்தேக்கம் இல்லாமல் போக்குவரத்திற்குப் பயன்பாட்டில் உள்ளன” என தெரிவித்தார்.
“கணேசபுரம் சுரங்கப்பாதையில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமேம்பாலப் பணியின் காரணமாக மழைநீர் தேக்கம் காணப்படுகிறது. புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ரயில்வே துறையினருடன் இணைந்து விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும். தற்காலிகமாக, இங்குத் தேங்கியுள்ள மழைநீரானது மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டு, ஒரு மணிநேரத்தில் போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்படும்” என விளக்கமளித்தார்.
"மழையின் காரணமாக விழுந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகள் தொடர்பாக 48 புகார்கள் பெறப்பட்டு, அவற்றில் 40 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது அயனாவரம் பகுதியில் மழைநீர்த்தேக்கம் உள்ளது. இந்தப் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஓரிரு நாட்களில் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டு, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் முடிவுறும்.
இந்த வருடம் ரூ.232 கோடி மதிப்பீட்டில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப் பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் மூன்று மாதங்களில் முடிவுறும். இந்த மழையின் காரணமாக மழைநீர் தேக்கம் காணப்படும் இடங்கள், தாழ்வான பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மழைநீர் தேக்கம் ஏற்படுவதற்கான வழிகள் மற்றும் காரணங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து, வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக அவற்றைச் சரிசெய்யத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் "கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக தற்பொழுது மழைநீர்த்தேக்கம் காணப்படவில்லை. வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்து மற்றும் உட்புறச் சாலைகளை அமைக்க சுமார் ரூ.500 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்ட இடங்கள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் பணிகள் முடிக்கப்பட்ட இடங்கள், சேதமடைந்த சாலைகள் ஆகியவற்றில் புதிதாக சாலைப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு, இப்பணிகள் அனைத்தும் மூன்று மாதங்களில் முடிக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.
மழைநீரை வெளியேற்றவும், விழுந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றவும் மாநகராட்சியின் சார்பில் 4000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களிடமிருந்து மழை தொடர்பான புகார்கள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் ரிப்பன் கட்டடம் மற்றும் மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:Chennai Rain: சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !