சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி சிவமுத்து என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உரிமம் கோரி விண்ணப்பித்த 690 குடிநீர் ஆலைகளில் 121 ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 569 குடிநீர் ஆலைகள் அளித்த விண்ணப்பங்களைப் பரிசீலிக்க ஜூலை 31 வரை அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டும் உரிமம் கோரி விண்ணப்பித்து தகுதியுடைய குடிநீர் ஆலைகளைத் தற்காலிகமாக ஜூலை 31ஆம் தேதி வரை இயக்க அனுமதி அளிக்கலாம் என அரசு முடிவு செய்துள்ளதாகவும் இதுதொடர்பாக ஓரிரு நாள்களில் அரசாணை பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆலைகள் உற்பத்தி செய்யும் தண்ணீரில் 15 விழுக்காடு தண்ணீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதிக நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் பகுதிகளைப் பொறுத்தவரை, 396 விண்ணப்பங்கள் உரிமம் கோரி வந்துள்ளதாகவும், அதை உரிய விதிகளின்படி விரைந்து பரிசீலிக்கப்படும் எனவும் கூறினார்.
இதைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து குடிநீர் ஆலைகளைத் தற்காலிகமாக இயங்க அனுமதிக்கலாம் என அரசுக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டனர்.
அதேபோல் அரசின் நிபந்தனையின்படி உற்பத்தி செய்யும் தண்ணீரில் 15 விழுக்காட்டை அனைத்து குடிநீர் ஆலைகளும், அரசுக்கு வழங்க வேண்டுமென அறிவுறுத்திய நீதிபதிகள், இதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கரோனா தாக்கம்: கைதிகளைப் பிணையில் விடுவிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் ஆலோசனை