சென்னை: தொழில்நுட்பத்தின் புதிய பகுதிகளில் ஆராய்ச்சியை விரைவுப்படுத்தவும், வால்மார்ட் பணியாளர்களுக்கு தொடர்ச்சியான கல்வியை வழங்கவும், இந்தியாவில் உள்ள இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பிற்கான திட்டங்களில் ஒத்துழைக்கவும் சென்னை ஐஐடியுடன் வால்மார்ட் குளோபல் டெக் ஒப்பந்தம் செய்துள்ளது.
வால்மார்ட் குளோபல் தலைமைத் தொழில் நுட்பம் மற்றும் மேம்பாட்டு அலுவலர் (சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவர்) சுரேஷ்குமார், ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள் முதல்வர் மகேஷ் பஞ்சக்நுலா, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் ஜுடித் ரவின் ஆகியோர் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிறுவனக் கூட்டாண்மையின் மூலம், சென்னை ஐஐடி மாணவர்களும், வால்மார்ட் குளோபல் டெக் பணியாளர்களும் ஆராய்ச்சித் திட்டங்களில் இணைந்து செயலாற்ற உள்ளனர். சென்னை ஐஐடியில் உள்ள தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி மையம் இதற்கான ஏற்பாடுகளை செய்யும்.
வால்மார்ட் குளோபல் டெக்
மேலும் பரந்த சுற்றுசூழல் அமைப்பை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்கா, புத்தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்ட அமைக்கப்பட்டுள்ள சென்னை ஐஐடி இன்குபேஷன் செல் ஆகியவற்றிலும் வால்மார்ட் குளோபல் டெக் தனது பங்களிப்பை வழங்கும்.
பல்வேறு குறுகிய, நீண்ட காலக் கல்வியைப் பெறுவதுடன், சில்லறை மற்றும் இணையவழி வர்த்தகத் துறையில் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பயிற்சித் திட்டங்களையும் வால்மார்ட் குளோபல் டெக் நிறுவனம் பெற முடியும்.
இது குறித்து பேசிய வால்மார்ட் குளோபல் தலைமை தொழில்நுட்ப அலுவலர் சுரேஷ் குமார், "உலகம் முழுவதும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களுக்கு ஏற்ப, வால்மார்ட் குளோபல் டெக் நிறுவனம் அடிப்படைத் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி நிர்வகிக்கிறது. எங்கள் நிறுவனம் மனிதர்களால் வழிநடத்தப்படும், தொழில்நுட்ப அதிகாரமிக்க ஒன்றாகும்.
சென்னை ஐஐடியுடன் ஒப்பந்தம்
வால்மார்ட்டின் உலகளாவிய வணிகங்களை இயக்கவும், சில்லறை வணிகத்தில் உள்ள சவால்களில் முன்னெடுத்துச் செல்லவும் இந்தியாவில் திறமையான பணியாளர்கள் இருக்க வேண்டியது முக்கியமானதாகும். சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த காலத்திலேயே நானும் என்னுடன் கல்வி பயின்ற பலரும் பொறியியல் மற்றும் பகுப்பாய்வுத் திறன்களை கூர்மையாக்கிக் கொண்டோம்.
சென்னை ஐஐடி-யுடனான இந்தத் தொடர்பு எங்கள் குழுக்களை மேலும் மேம்படுத்தவும், டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் ஒன்றிணைந்து செயல்படவும், இந்தியாவில் கல்விச் சூழலை வலுப்படுத்தவும் உதவும்" என்றார்.
இதையும் படிங்க: என் ஆட்சியில் யார் தவறு செய்தாலும் தண்டனை தான் - முதலமைச்சர் ஸ்டாலின்