சென்னை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்ததை அடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வாக்காளர்கள், யாருக்கு எந்த சின்னத்துக்கு வாக்களித்தனர் என்பதைத் தெரிந்து கொள்ளும் வகையில், விவிபேட் (VVPAT) எனும் ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு காட்டும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த மக்களவைத் தேர்தலில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. தமிழ்நாட்டில் எதிர்வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டுக்களை முழுமையாக எண்ணும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் ஐந்து வாக்குச் சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் மட்டுமே எண்ணப்பட்டது. மொத்தமுள்ள 541 மக்களவைத் தொகுதிகளில் 342 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகைச் சீட்டுகளுக்கு இடையில் வித்தியாசங்கள் இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டுகள் அனைத்தையும் எண்ண உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே இதுசம்பந்தமாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் நெருங்கி வரும் தற்போதைய நிலையில், இவ்விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும், உரிய நேரத்தில் இந்த கோரிக்கையை மனுதாரர் எழுப்பலாம் எனவும் கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.