சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் பார்வை இழந்த மாற்றுத்திறனாளிகள், நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று முதல் அவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
தொடரும் மறுப்புகள்.. வலுக்கும் கோரிக்கைகள்..
இதுகுறித்து பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பட்டதாரி சிங்கராவேலன் கூறியதாவது,
* 2013ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று பணிக்காக காத்திருக்கும் அனைத்து பார்வை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும்.
* உதவி பேராசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக பணிக்காக காத்திருக்கும் பார்வை இழந்த பட்டதாரிகளுக்கு அந்த பணியிடங்களை வழங்க வேண்டும்.
![பார்வையற்ற பட்டதாரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-visually-disabled-protest-script-vedio-7204807_18022021110628_1802f_1613626588_84.jpg)
* அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் பணியமர்த்தப்பட்ட விழித்திறன் இழந்த அனைத்து பட்டதாரிகளையும் எவ்வித பாகுபாடுமின்றி உதவிப் பேராசிரியர்களாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.
* அரசு ஆணையின் அடிப்படையில் பணி நியமனம் செய்யாத அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்திட வேண்டும்.
* மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின்படி விழித்திறன் இழந்தவர்களுக்கான ஒரு விழுக்காடு இட ஒதுக்கீட்டினை முறையாக கணக்கிட்டு அனைத்து துறைகளிலும் உடனடியாக சிறப்பு ஆள்சேர்ப்பு மூலமாக பணி நியமனம் வழங்க வேண்டும்.
அரசு எங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என தெரிவித்தார்.