நடிகர் விஷாலின் விசால் பிலிம் பேக்டரி அலுவலகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
இதில் ஒரு கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான ஆவணங்கள் சிக்கியதையடுத்து, உரிமையாளர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அலுவலர்கள் பல முறை சம்மன் அனுப்பினர்.
ஆனால், விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால், கடந்த 2018ஆம் ஆண்டு சேவை வரித்துறை சார்பில் அவர் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை நீதிபதி மீனாகுமாரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, "விஷாலுக்கு 10 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத காரணத்தினால் அவர் மீதான விசாரணையை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை" எனச் சேவை வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், சேவை வரித்துறையில் விஷால் ஆஜராகாதது, விசாரணைக்கு இடையூறு விளைவித்தது, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வேண்டும் என நினைத்ததால் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ராதே ஷ்யாம் ரிலீஸ் தள்ளிபோகிறதா? - படக்குழு விளக்கம்