சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவுக்கு, அ.ம.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக, சசிகலா அறிவித்தார்.
சட்டப்பேரவை தேர்தலில் சசிகலாவின் வருகைப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பியிருந்த தொண்டர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி கண்டு ஆட்சியை இழந்தது. அமமுக கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. தொண்டர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியைச் சரிசெய்திட, சசிகலா 'ரீ-என்ட்ரி' கொடுப்பார் எனப் பரவலாகப் பேசப்பட்டது. இந்தநிலையில், அவர் தனது தொண்டர் ஒருவருடன் தொலைப்பேசி வாயிலாகப் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதில், 'நல்லா இருக்கீங்களா..? வீட்டில் எல்லோரும் நன்றாக உள்ளனரா? சீக்கிரம் வந்துவிடுவேன். ஒன்றும் கவலைப்பட வேண்டாம். கண்டிப்பாகக் கட்சியைச் சரி செய்துவிடலாம். அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். நிச்சயம் வருவேன்" என்று பேசியிருந்தார். இந்த ஆடியோ, அவரது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா மீண்டும் அரசியல் களத்திற்குள் கால் பதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கரோனா ஊரடங்கு முடிந்த பின்னர், அதிமுக முக்கிய நிர்வாகிகள் சசிகலாவைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.