விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகேயுள்ள சிறுமதுரையைச் சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த முருகன் என்ற அதிமுக பிரமுகருக்கு முன் விரோதம் இருந்து வந்தது. இதனால், அடிக்கடி ஜெயபால் தரப்பை முருகன் தாக்கி வந்தார்.
இந்நிலையில், கடந்த மே 10ஆம் தேதி ஜெயபால் வீட்டில் இல்லாத நேரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகள் ஜெயஸ்ரீயை அதிமுக பிரமுகர்களான முருகன், கலியபெருமாள் இருவரும் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு வீட்டை பூட்டிச் சென்றனர். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீ, இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலத்தில், முருகன், கலியபெருமாள் இருவரும் தந்தை மீதிருந்த முன்விரோதம் காரணமாக தன்னை தீவைத்து எரித்ததாக தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து முருகன், கலியபெருமாள் இருவர் மீதும் திருவெண்ணெய் நல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். கடந்த மே மாதம் 30ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி இருவரும் தற்போது கடலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் முருகனின் மனைவி அருவி மற்றும் கலியபெருமாளின் மனைவி சவுந்தரவள்ளி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், "ஆதாரங்கள் இல்லாமல் உள்நோக்கத்துடன் தங்கள் கணவர்கள் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கின் ஆவணங்கள் தங்களுக்கு தமிழில் தரப்படவில்லை. இருவரும் தானாகவே முன்வந்து சரணடைந்த போதும் காவல்துறையினர் அவர்களை கைது செய்தது போல திரித்து கூறியுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளனர்.
அதபோன்று முருகனின் மனைவி அவரது செல்போன் அழைப்பு விவரங்களையும், காவல் நிலையத்தின் சிசிடிவி கேமரா காட்சிகளையும் உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்.
இவ்வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூன் 30) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து உள்துறை செயலர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கடலூர் சிறைத் துறை கண்காணிப்பாளர் மற்றும் திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: அஸ்ஸாம் வெள்ளம்: விலங்குகளைக் காக்க வாகனங்களில் செல்வோரின் வேகத்தை குறைக்க புதிய திட்டம்