சென்னை: தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு அரசால் ரத்து செய்யப்பட்டது. கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்த்து தெரிவித்து வருகின்ற நிலையில், ரத்து செய்யப்பட்ட கிராம சபை கூட்டங்களை உடனடியாக நடத்த அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் வலியுறுத்தி வந்தன.
கிராம சபை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துதல், தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதுதல், முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலம் முறையிடம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளும் விதமாக கிராம சபை மீட்பு வாரத்தை நடத்த அறப்போர் இயக்கம் திட்டமிட்டது. மூத்த காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சுதந்திர போராட்ட வீரரான கொடிக்கால் ஷேக் அப்துல்லா, சித்திலிங்கி கிராம ஊராட்சி தலைவர் மாதேஸ்வரி மஞ்சுநாதன் ஆகியோர் இணைந்து இன்று கிராம சபை மீட்பு வாரத்தை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் பேசிய மூத்த காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், "ஊருக்கு உழைப்போம் உன்னதமாக வாழ்வோம் என்ற வாசகத்தின்படி செயல்பட்டோமானோல் இந்தியா உலகிற்கு வழிகாட்டும். அதற்கு உயிர் இந்த கிராம சபை தான். உள்ளாட்சி அதிகாரங்களை வலுப்படுத்த எண்ணும் எண்ணற்ற இளைஞர்களை ஒருங்கிணைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதை பாருங்கள் : 'கிராம சபை மீட்பு வாரம்' இணைய நிகழ்வு