சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமா உலகில் தலை சிறந்த நடிகராக ஆக கொண்டாடப்படுபவர். ரசிகர்களால் மட்டுமின்றி தயாரிப்பாளர்களாலும் கொண்டாட படுபவர் நடிகர் விஜய். இவரது படங்கள் வியாபார ரீதியாகத் தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நடிகர் விஜய் தற்போது அரசியலில் ஈடுபட தீவிரமாக ஆயத்தமாகி வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 17ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை, சென்னை அழைத்து பாராட்டு விழா நடத்தினார்.
சென்னை அடுத்த நீலாங்கரையில் நடந்த பாராட்டு விழாவில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். மேலும் கிட்டத்தட்ட 13 மணி நேரம் நின்று அத்தனை மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். விஜய் இந்த செயல் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது.
இந்த நிலையில் பள்ளி மாணவ - மாணவிகளை பாராட்டு விழாவை சிறப்பாக நடத்தி முடித்த மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து நடிகர் விஜய் பாராட்ட உள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக பணியாற்றிய தொகுதி பொறுப்பாளர்களை நேரில் அழைத்து நடிகர் விஜய் பாராட்ட உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர்களும் பங்கேற்க உள்ளனர்.
மேலும், பல்வேறு விஷயங்கள் குறித்து நடிகர் விஜய் ஆலோசனை செய்யவுள்ளதாகவும். தொகுதி பொறுப்பாளர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொள்கிறார் நடிகர் விஜய். இந்த நிகழ்ச்சி நாளை காலை 9 முதல் 10 மணிக்குள் சென்னை பனையூர் அலுவலகத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசை இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அண்மையில் இப்படத்தின் 'நா ரெடி' என்ற பாடல் வெளியானது. விஜய் ரசிகர்கள் மத்தியில் இப்பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்று வந்தாலும், அதில் உள்ள போதை தொடர்பான வரிகள் மற்றும் பாடலில் நடிகர் விஜய் சிகரெட் பிடித்து இருப்பது போன்றவை சர்ச்சையை உண்டாக்கியது.
மேலும் 'லியோ' படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடிப்புக்கு பிரேக் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு விஜய் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Falaknuma train : தீ விபத்தில் நூற்றுக்கணக்கான மக்களை காத்த இளைஞர்... இளைஞரின் துரதிர்ஷ்டம்?