சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அன்று இரவு சுமார் 10 மணி அளவில் தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, அவரது மனைவி மகன்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கிய விஜய்-யை பாதுகாவலர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
அப்போது எதிர்பாராத நேரத்தில் கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விஜய்-யை நோக்கி காலணியை வீசினார். ஆனால் அது நடிகர் விஜய் மீது படாமல் அவரது அருகில் சென்று விழுந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது நடிகர் விஜய் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக தென் சென்னை மாவட்ட தலைவர் அப்புனு என்பவர் கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “நடிகர் விஜய், விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி புறப்பட்ட போது கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத ஒருவர் செருப்பை தூக்கி வீசி உள்ளார். இது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவர் மீது பாசத்தை வைத்துள்ள ஒட்டுமொத்த சொந்தங்களின் மனது புண்படுத்தும் வகையிலும், அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
புகாரின் அடிப்படையில் கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் சமூக வலைத்தளத்தில் பரவிய காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கேப்டன் மில்லர் பட விழாவில் அத்துமீறலா? ஐஸ்வர்யா கூறுவது என்ன?