சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றங்களை "விஜய் மக்கள் இயக்கம்" என மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். இவரது மக்கள் இயக்கம் மாநிலம் முழுவதும் ஏராளமான நலத்திட்டங்களை செய்து வருகிறது. ரத்த தானம், படிப்பு உதவி, உணவு வழங்குதல் உள்ளிட்ட நற்செயல்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே நடிகர் விஜய் தீவிர அரசியலில் இறங்கும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அடித்தளமாக விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தலைவர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளை கொண்டாடவும், மாநிலம் முழுவதும் உள்ள வாக்காளர்களின் பட்டியலை தயார் செய்யவும் அறிவுறுத்தியதாக தெரிகிறது. அதேபோல், கடந்த ஜூன் மாதம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கல்வி விருது வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில், தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்த நடிகர் விஜய் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. மக்கள் இயக்கப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புஸ்ஸி ஆனந்த் மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், முதல் முறையாக விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர்கள் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் வரும் 5ஆம் தேதி, பனையூர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்க உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் ஓய்வுக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை ஆலோசனை நடத்தும்படி அறிவுறுத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் சில முக்கிய விஷயங்களை விவாதிக்க விஜய் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தேவையான விஷயங்களையும், சட்ட ரீதியாக சந்திக்க நேரிடும் விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையும் படிங்க: 234 தொகுதி நிர்வாகிகளை நாளை சந்திக்கிறார் விஜய்.. புதிய திட்டம் என்ன?