சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், 'விஜய் மக்கள் இயக்கம்' மூலமாக நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். இதன் பொதுச் செயலாளராக உள்ள புஸ்ஸி ஆனந்த் தலைமையின் கீழ், விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் நடிகர் விஜய், தனது மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். மேலும் அவரது மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, கணிசமான இடங்களில் வெற்றியும் பெற்றனர். அப்போது அவர்களை விஜய், நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேநேரம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, அம்பேத்கர் சிலை மற்றும் அவரது திருவுருவப் படங்களுக்கு மரியாதை செலுத்த பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள அவர், தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு, அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடுவது குறித்து ஆலோசனை வழங்கி உள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து மே15ஆம் தேதி முதல் மே மாதம் முடியும் வரை, ஒவ்வொரு மாவட்ட வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறுகிறது. மேலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு, புதிய படிவம் விரைவில் வழங்கப்பட உள்ளது.
அந்தப் படிவத்தில் அரசியல் இயக்கம் தொடங்குவதற்கான ஒப்புதல் மற்றும் ஆலோசனைகள் குறித்து இருப்பதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான படிவமும் வழங்கப்பட உள்ளது. விரைவில் நடைபெற உள்ள விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: 'லியோ' படம் குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்ட மன்சூர் அலிகான்!