விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நீண்டகாலமாக விஜய் ரசிகர்கள் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்திருந்தார். தற்போது அதற்கான தொடக்கப் புள்ளியையும் அவரே வைத்திருக்கிறார்.
பிரபல பிஆர்ஓ டைமண்ட் பாபு சிறிது நேரத்திற்கு முன்பு, அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய். விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாறுகிறது. கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் விஜய் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த செய்தி பொய் என பிஆர்ஓ ரியாஸ் பதிவிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் இச்செய்தி வைரலாகி ஊடகங்களைச் சென்றடைய, அரசியல் கட்சியைப் பதிவு செய்தது நான்தான் என விஜய்யின் தந்தை எஸ்ஏசி ஆஜரானார். அதுமட்டுமல்லாது கூடுதல் தகவல் ஒன்றையும் சொல்லிவிட்டுச் சென்றார். கட்சி விஜய் பேர்லதான் இருக்கு, ஆனால் அரசியலுக்கு வருவதை பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
எஸ்ஏசி கொடுத்த ஷாக்கிலிருந்து மக்கள் மீள்வதற்குள் தந்தை எஸ்ஏசிக்கு விஜய் ஒரு ஷாக் கொடுத்திருக்கிறார். விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, ‘ஆடுகளம்’ பேட்டைக்காரன் ஸ்டைலில், என் அப்பா கட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எனது ரசிகர்கள் யாரும் அதில் சேர வேண்டாம், பணியாற்ற வேண்டாம். நமது இயக்கத்துக்கும் அக்கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது எனது புகைப்படத்தையோ, இயக்கத்தின் பெயரோ பயன்படுத்தினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அரசியல் கட்சி தொடங்கிய விஜய்?