சென்னை அம்பத்தூரில் உள்ள வில்லிவாக்கம் ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் ஊரக வளர்ச்சித்துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வில்லிவாக்கம், பூவிருந்தவல்லி, சோழவரம், புழல் ஆகிய ஒன்றியங்களில் நடைபெறும் பணிகளுக்கு அனுமதி வழங்கி வருவார்கள். இந்த அலுவலகத்தில் ஒன்றியங்களில் நடைபெறும் பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தொடர்ந்து புகார் வந்துள்ளது.
அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் தலைமையில் 6 பேர் கொண்ட அலுவலர்கள் அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த உதவி செயற்பொறியாளர் கீதா உள்பட ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கணினி மற்றும் பதிவேடுகளில் உள்ள ஆவணங்களைச் சரிபார்த்தனர்.
அப்போது, அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.81ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்களைப் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்திற்குச் சரியான விளக்கத்தைக் கூறுமாறு அலுவலர்களுக்கு லஞ்ச ஒழிப்பு காவல் துறை உத்தரவிட்டு அங்கிருந்து சென்றனர். ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் 5 மணிநேரம் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றதால் அம்பத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.