முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் கடந்த 22ஆம் தேதி அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில் இச்சோதனை நடந்ததாக தெரிவித்திருந்தனர்.
சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத 25 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். அவர் கிட்டத்தட்ட 55 விழுக்காடு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது.
போக்குவரத்து துறைக்கு கொள்முதல் செய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவிகள், சிசிடிவி கேமராக்கள், ஸ்டிக்கர்கள், அறிவிப்பு பலகைகள், பேருந்துகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்ஸ் ஆகியவற்றின் மூலம் சொத்து சேர்த்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வந்தனர் .
இந்நிலையில், தற்போது போக்குவரத்து துறைக்கு உபகரணங்களை வழங்கிவந்த தனியார் நிறுவனங்களுக்கு ஏஜென்டாக இருந்த ரவிக்குமாரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உபகரணங்களை குறைவான விலையில் வாங்கினாரா விஜயபாஸ்கர்?
சந்தையில் குறைவான விலைக்கு கிடைக்கக்கூடிய உபகரணங்களை அதிக விலைக்கு போக்குவரத்துத் துறைக்கு விற்று, அதன் மூலம் கிடைக்கக்கூடிய பணமானது தரகர்கள் மூலம் அமைச்சருக்கு கொண்டு செல்லப்பட்டது என்ற கோணத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டிஎஸ்பி தலைமையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர், அண்ணா நகரில் உள்ள ரவிக்குமார் அலுவலகத்தில் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சமூக நீதி அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு- ஜி.கே மணி கோரிக்கை