சென்னை: சைதாப்பேட்டையில் ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் இயக்குநரான ஞான சேகரன் ஐஏஎஸ் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், "கால்நடை பராமரிப்பு மற்றும் வனத்துறை சார்நிலை பணி ஆய்வாளர் பணிக்கு காலியிடம் உள்ள நிலையில், பொதுமக்கள் விண்ணப்பிக்கும் வகையில் இரண்டு நாளிதழில் விளம்பரம் கொடுக்கப்பட்டு காலி பணியிடத்தை நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்தச் சூழ்நிலையில், இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் 100 ரூபாய் செலுத்துமாறு ஒரு கும்பல் போலியான விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதனை நம்பி பலர் 100 ரூபாய் செலுத்தி ஏமாந்து வருகின்றனர். ஏமாந்த பொதுமக்கள் பலர் தங்களிடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் போலி விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். இந்த விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.65 கோடி மதிப்பிலான 4.77 கிலோ தங்கம் பறிமுதல்!