சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில், இந்திய வானிலை மையத்தின் தென்மண்டலத்தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச்சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கையை ஒட்டி வளிமண்டலகீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. கிழக்கு திசை காற்றும் மேற்குத்திசை காற்றும் சந்திக்கும் பகுதி தமிழ்நாடு பகுதியில் நிலவுகிறது.
இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் 13 சென்டி மீட்டரும், பெரம்பூரில் 12 சென்டி மீட்டரும் மழைப்பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையினைப்பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும், டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு கடற்கரைப்பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அடுத்த இரு தினங்களுக்கு இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நவம்பர் 1ஆம் தேதி பதிவான மழையைப் பொறுத்தவரையில், கடந்த 72 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இன்று(நவ.1) பதிவான மழை மூன்றாவது அதிகபட்ச கனமழையாகும். கடந்த 30 ஆண்டுகளைப்பொறுத்தவரையில் இது முதலாவது அதிகபட்ச கனமழையாகும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை