இதுதொடர்பாக அந்நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு, குறிப்பாக பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என இரு நிறுவனங்களும் கூட்டாக அறிவித்துள்ளன. இந்த திட்டம் மூலம், ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு திட்டத்தின் மூலம் இளநிலை அறிவியல் மற்றும் டேட்டா சயின்ஸ் பயில மாணவர்களுக்கு வயது, முந்தைய படிப்பு, இடம் ஆகிய தடைகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வயது அதிகம் உள்ளவர்கள், முந்தைய வகுப்புகளில் வேறு பாடப்பிரிவுகளைப் படித்தவர்களும் இந்த பாட வகுப்பில் சேர முடியும். இந்த பாடத் திட்டமானது தொடக்க நிலை, டிப்ளமோ நிலை, டிகிரி நிலை என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு கற்பிக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெரிஜான் இந்தியா நிறுவன மேலாண் இயக்குநர் பேசுகையில், "இந்த திட்டத்துக்கான சென்னை ஐஐடியுடன் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட சூழல்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு உயர்தர கல்வி, எதிர்கால தொழில்நுட்பம் ஆகியவை கற்பிக்கப்படும் என்றும், டேட்டா சயின்ஸ் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு மாணவர்களை தயார்படுத்துவதில் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.