சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டால் செயற்கை சுவாசம் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். தற்போதைய சூழ்நிலையில் வென்டிலேட்டர்களை எளிதில் உருவாக்கவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாது.
அதேநேரத்தில் நோயாளிகளின் நுரையீரலுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படும்போது கட்டாயம் அளிக்க வேண்டும். இத்தாலியில் நோயாளிகளுக்கு தேவையான செயற்கை சுவாசம் அளிப்பதற்கு பெரிதும் சிரமப்பட்டு உள்ளனர். அதுபோன்ற நிலை இந்தியாவில் உருவாகக் கூடாது என்பதற்காக அரசு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் மேலாண்மை துறை முதல்வர், நானோ தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் பேராசிரியர் சுவாமிநாதன் கூறியதாவது, “ஒரு வென்டிலேட்டரை பயன்படுத்தி நான்கு நபர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் வகையில் ஒய் வடிவில் இரண்டு பிரிவாக பிரிக்கும் குழாயை தயார் செய்துள்ளார்.
3டி பிரிண்டிங் மூலம் இந்த குழாய் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை திருச்சியில் உள்ள காவிரி மருத்துவமனையில் வென்டிலேட்டர் பொருத்தி வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளோம். இதனை எளிதில் உருவாக்க முடியும். ஒரு வென்டிலேட்டர் இயந்திரத்திலிருந்து 4 நபர்களுக்கு தேவையான ஆக்சிஜனை செயற்கை சுவாசத்திற்கு அளிக்க முடியும்.
மேலும், இந்த தொழில்நுட்பத்தை 3டி பிரிண்டிங் பயன்படுத்துபவர்கள் கேட்டால் நாங்கள் அளிப்பதற்கும் தயாராக உள்ளோம். தற்போதைய சூழ்நிலையில் நோய்த்தொற்று வரக்கூடாது என்பது எல்லோருடைய எண்ணமாக இருக்கிறது. அவ்வாறு வந்தால் அதில் இருந்து காப்பதற்காக இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மும்பையில் ஒரு கோடி மதிப்புள்ள 4 லட்சம் முகக் கவசங்கள் பறிமுதல்!