சென்னை: கடந்த ஜனவரி 17ஆம் தேதி கூடிய உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவர்களில் வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி உள்ளிட்ட 5 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டதையடுத்து பிப்ரவரி 7ஆம் தேதி அவர்கள் பதவியேற்றனர்.
இவர்களில், மாவட்ட நீதிபதி பி.வடமலை, வழக்கறிஞர்கள் வெங்கடாச்சாரி வி.லட்சுமி நாராயணன், ஆர்.நீலகண்டன், ஜான் சத்யன் ஆகியோரின் பெயர்கள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில், வழக்கறிஞர் வெங்கடாச்சாரி வி.லட்சுமி நாராயணனை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் இன்று (பிப்ரவரி 23) உத்தரவிட்டுள்ளார்.
இவருக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இவரது நியமனம் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ள நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கை 17ஆக குறைந்துள்ளது.
இதையும் படிங்க:என்ன சொல்றீங்க.. பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணியா? - அறந்தாங்கி கடையில் அலைமோதிய கூட்டம்