தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், "ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றதற்காக திமுக தலைவர் தலைவர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
தமிழ்நாடு அரசு தேர்வாணைய துறையால் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ்நாடு அல்லாத மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், அண்டை நாட்டவர்களும் கலந்துகொள்ளலாம் என்ற அரசாணையை 2016இல் ஓ. பன்னீர்செல்வம் கொண்டுவந்தார்.
தமிழில் எழுத பேச தெரியாவிட்டாலும் அவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற அரசாணையை ரத்துசெய்ய வேண்டும். இதற்கு எதிரான நடவடிக்கையை திமுக எடுக்க வேண்டும், வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை எழுப்ப வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளேன்.
தமிழ்நாடு முதலமைச்சராக ஐந்து முறை இருந்த கருணாநிதி 93 வயதிலும் சக்கர நாற்காலியில் நீதிமன்றம் சென்றார். ரஜினிகாந்தைவிட பல லட்சம் மக்களை கவர்ந்த தலைவர் நீதிமன்றம் செல்லும்போது ஒரு நடிகர், 'நான் நீதிமன்றத்துக்கு வர மாட்டேன்' என்று கூறுவதை ஏற்க முடியாது. பணம் வரும்போது ரசிகர்கள் தொந்தரவாகத் தெரியவில்லையா, நீதிமன்றம் வரும்போது அவர்கள் தொந்தரவாகத் தெரிகிறார்களா?" என்றார்.
இதையும் படிங்க: பார்வையாளர்களை கவர்ந்த ஆணழகன்கள்... மகுடம் வென்ற போட்டியாளர்கள்...!