மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் குரோம்பேட்டை தனியார் மண்டபத்தில் வெள்ளமும் வறட்சியும் என்னும் தலைப்பில் நீர் தட்டுப்பாடு, நதிநீர் இணைப்பு நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் பிரபல நீரியல் நிபுணர் பேராசிரியர் ஜனகராஜன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில், "இந்தியாவில் மழையின் அளவு குறைந்து விட்டதாக கூறுவது துளியும் உண்மையில்லை. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் போதிய மழை ஆண்டுதோறும் பொழிகின்றது. ஆனால் நம்மிடம் அவற்றை முறையாக பாதுகாக்கவும் சேமிக்கவும் வழிவகை இல்லாத காரணத்தினால் பொழியும் அனைத்து மழை நீரும் வீணாக கடலில் கலக்கிறது.
இந்த நீரை நாம் முறையாக பாதுகாத்து பயன்படுத்தினால் ஆண்டு முழுவதும் நமக்கு பலன் தரும் விவசாயம் பெருகும். வறட்சி என்ற சொல்லே இந்தியாவில் இருக்காது. இந்திய அரசாங்கம் தொழில்துறையின் வளர்ச்சியை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்படுகிறது. ஆனால் நம் இயற்கை வளத்தை அழித்து அதில் கிடைக்கும் வளர்ச்சியை நாம் வளர்ச்சியாக ஒருபோதும் கருத்தில் கொள்ளக்கூடாது.
இயற்கை வளங்களை அழித்து நமக்கு கிடைக்கும் வளர்ச்சி ஒருபோதும் நாட்டை வளப்படுத்தாது. நம்மிடம் எஞ்சியுள்ள நீர்நிலைகளை எப்படியாவது முறையாக பராமரித்தால் மட்டுமே நாம் அனைவரும் உயிர்வாழ முடியும்" என்று கூறினார்