வேலம்மாள் கல்வி குழுமத்தின் தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம். இவர் சென்னை மற்றும் மதுரையை தலைமையாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் மேலும் பொறியியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, நர்சிங் மற்றும் மருத்துவ கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களை வேலம்மாள் அறக்கட்டளை என்ற பெயரில் நடத்திவருகிறார்.
இந்த கல்வி குழுமங்களில் மாணவர் சேர்க்கையின்போது அதிக நன்கொடை வாங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. வாங்கப்பட்ட நன்கொடைகள் கணக்கில் காட்டப்படாமல் இருப்பதாகவும் வருமானவரித் துறை அலுவலர்களுக்கு புகார் வந்ததையடுத்து, அவர்கள் அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், சென்னை, மதுரை, தேனி, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்படும் கல்வி நிறுவனங்களிலும், வேலம்மாள் கல்வி குடும்பத்திற்கு தொடர்புடைய நிர்வாக இயக்குனர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மூன்று நாட்களாக நடைபெறும் சோதனையில், கணக்கில் காட்டப்படாத இரண்டு கோடி ரூபாய் பணமும் 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.