தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டுத்தொடர் இன்று (மே11) சென்னை கலைவாணர் அரங்கில் நடைப்பெற்றது. பேரவையின் தற்காலிகத் தலைவர் கு.பிச்சாண்டி தேர்தலில் வென்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பதவி பிராமணம் செய்து வைத்தார்.
அதன்பின் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, " தமிழ்நாட்டு மக்களுக்காக சட்டப்பேரவையில் தொடர்ந்து பணி புரிந்துள்ளேன். இடையில் 10 ஆண்டுகாலம் சட்டப்பேரவையில் பணியாற்றும் வாய்ப்பு இல்லாமல் போனது. இப்போது திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன்.
சட்டப்பேரவையில் உறுப்பினராக இருந்து போது மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி போன்றவை அமைப்பதற்கும், தொகுதியின் வளர்ச்சிக்கும், லாட்டரி ஒழிப்பு, மணல் மாஃபியாவை கட்டுப்படுத்துதல் போன்றவற்றையும் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளேன். தற்போதுள்ள அரசு நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறியுள்ளனர். அதனை ரத்துச் செய்வதற்கு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம்.
ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தவுள்ளேன். மத்திய அரசு தமிழ்நாட்டின் மீது திணித்துள்ள ஓ.என்.ஜி.சி, 8 வழிச்சாலைத் திட்டம் உள்ளிட்வற்றை அகற்றுவதற்கும் பாடுபடுவேன். மாற்றத்திற்கான அரசாக திமுக இருக்கும் என நம்புகிறேன். தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக சட்டப்பேரவையில் என் குரல் ஒலிக்கும்" என்றார்.