கரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் சென்னையில் கரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. சென்னை காய்கறி அங்காடியான கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்துவரும் வியாபாரிகள். தொழிலாளர்கள் என பெரும்பாலானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்றுவந்த அனைவரையும் கண்டறிந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இந்த காய்கறி கடைகளில் விற்பனை செய்வதற்காக வந்த காய்கறிகள் அனைத்தும் கோயம்பேட்டிலிருந்து வாங்கி வந்து விற்பனை செய்து வருவதால், கோயம்பேடுக்கு சென்றவர்களை பரிசோதனை செய்யவேண்டும் என்று கூறி பம்மல் நகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் 7 பெண்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகளை பம்மல் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திற்கு 7-ஆம் தேதி காலை வரவழைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்ய யாரும் வராத நிலையில், தனியார் மண்டபத்தில் 21 நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பதாகக் கூறி அதிகாரிகள் மண்டபத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். ஆனால் அந்த மண்டபத்தில் அவர்களுக்கு எந்த ஒரு வசதியும் செய்து தரவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்க வைக்கப்பட்டுள்ள இந்த மண்டபத்தில் இதுவரை எந்த கிருமிநாசினியும் தெளிக்கபடவில்லை, மண்டபத்தை சுத்தப்படுத்தவும் இல்லை. முகக்கவசம், கிருமிநாசினி போன்ற எந்த மருத்துவ உபகரணங்களும் தரவில்லை எனவும் கூறுகின்றனர். இங்கு தங்க வைக்கப்பட்டவர்களுக்கு ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே மண்டபத்தில் இருக்கிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தங்களை பரிசோதனை செய்து முடிவுகளை அறிவிக்க வேண்டும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க:
கரோனா தொற்று: வடமாநிலத்தவர்கள் திருமண மண்டபத்தில் தங்கவைப்பு