கரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னையில்தான் கரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்துவரும் வியாபாரிகள், தொழிலாளர்கள் என பெரும்பாலானோருக்கு கரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால் கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பின்னர் கோயம்பேடு சந்தைக்குச் சென்று வந்த அனைவரையும் கண்டறிந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இங்கிருந்து கோயம்பேடுக்கு சென்றவர்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்று பம்மல் நகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில், ஏழு பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் பம்மல் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
காய்கறி வியாபாரிகள் தனியார் மண்டபத்திற்கு வந்து பலமணி நேரம் ஆகியும் அவர்களை பரிசோதனை செய்வதற்காக மருத்துவர்கள் யாரும் நேரத்திற்கு வராததால் நாங்கள் வீட்டிற்கு செல்கிறோம் என வியாபாரிகள் கூறினர்.
உடனே நகராட்சி ஊழியர், காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி ”நீங்கள் வெளியே செல்வதற்கான அனுமதி கிடையாது நீங்கள் அனைவரும் 21 நாள்கள் இந்த மண்டபத்தில்தான் தனிமையாக இருக்க வேண்டும்” எனக் கூறியதும் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
எங்களை பரிசோதிக்காமல் ஏன் இங்கு தனிமையில் இருக்க வேண்டுமென காவல் துறையினருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதையும் படிங்க:'கோயம்பேடு சந்தை நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது'