சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் காய்கறிகள், பழங்கள் விநியோகம் செய்வது குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்:
"தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகை சுமார் 7 கோடி என்ற கணக்கில், காய்கறிகள், பழங்களின் தினசரி தேவை 18 ஆயிரம் மெட்ரிக் டன் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தமட்டில் காய்கறிகள், பழங்களின் தினசரி தேவை 1,500 மெட்ரிக் டன் என கணிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் வீடுகள் தோறும் 4,380 வாகனங்களில், காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்ய உள்ளாட்சித்துறை, கூட்டுறவுத் துறைகளுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையைத் தவிர பிற பகுதிகளில் 2,228 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் ஆகியவை விநியோகம் செய்யப்படும். சென்னை மாநகரத்தில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் 1,610 வாகனங்கள் மூலம் தினம்தோறும் 1,160 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் விநியோகிக்கப்படும். தேவையான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அருகிலுள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காய்கறிகள், பழங்கள் விநியோகம் தொடர்பான தகவலைப் பெற 044 - 22253884 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாநில அரசுடன் மத்திய அரசு முரண்படுகிறது - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்