சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட சம்மன் தொடர்பாக திங்கள் கிழமை காலை சீமான் ஆஜராவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சீமான் சார்பாக சென்னை காவல் ஆணையரகத்தில் மனு அளித்துள்ளனர். அதில், தான் விசாரணைக்கு ஆஜராகும்போது தன் மீது குற்றம் சாட்டப்பட்ட விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகியோரும் அதே நேரத்தில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
மேலும், “நான் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். மூவரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தி உண்மைத் தன்மையை அறிய வேண்டும். விஜயலட்சுமியும், வீரலட்சுமியும் என் மீது எந்த ஆதாரமும் இல்லாமல் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவதூறு பரப்பி வருகின்றனர். என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
அதேபோல், சென்ற முறை சம்மன் அனுப்பியபோது நான் அந்த வழக்கின் அடிப்படை விபரங்களை கேட்டபோது காவல் துறை விபரங்களை தர மறுத்து விட்டனர். எனது கட்சி நிகிழ்ச்சிகளுக்கு உண்டான நேரத்தை நான் முடிவு செய்து வைத்துள்ளேன்.
அதனால் நான் ஆஜராகும்போது ஒரே நேரத்தில் அவர்களும் ஆஜராகி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் தமிழர் முன்னேற்ற படை வீரலட்சுமி தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “நீங்கள் விடுத்த வேண்டுகோளை நான் ஏற்றுக் கொள்கிறேன். நானும், நடிகை விஜயலட்சுமியும் உங்களுடன் விசாரணைக்கு ஆஜராகிறோம். ஆனால், இந்த விசாரணையின்போது உங்கள் மனைவி கயல் வழி மற்றும் விஜயலட்சுமி புகாரில் குறிப்பிட்டுள்ள தேன்மொழி என்கிற பெண்ணும் ஆஜரானால் நானும், விஜயலட்சுமியும் விசாரனைக்கு ஆஜராகுகிறோம்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம்.. மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு!