சென்னை: அனைத்து கால்நடை சந்தை வியாபாரிகள் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினருடன் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வன்னியரசு, "தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து மாடுகளை வாங்கி வந்து தமிழ்நாடு, கேரளா கால்நடை சந்தைகளில் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
அதுபோல மாடுகளை ஏற்றி கொண்டு திருப்பூர் வழியாக வரும் போது இந்து மக்கள் முன்னணியை சேர்ந்த தமிழ்செல்வன் வாகனத்தை வழிமறித்து பசுமாட்டை கடத்தி செல்வதாக கூறி ரூ. 10 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளார். ஓட்டுனர் கொடுக்க மறுத்ததால் மாட்டை கடத்துவதாக திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதே போல் மாடுகளை வாங்கி செல்லும் போது தொடர்ந்து மேற்கு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்து முன்னணி, சிவசேனா போன்ற கட்சியினர் மதமோதலை ஏற்படுத்தும் வகையில் பசுவதை எனக்கூறி பொய்யான தகவலை பரப்பி மிரட்டி மாடுகளைப் பறித்து செல்கின்றனர்.
இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை உடனடியாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஏடிஜிபியிடம் புகார் அளித்துள்ளோம்" என்றார்.
மேலும், பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகை மீராமிதுன் மீது கொடுத்த புகாரில் 7 பிரிவின் கீழ் சென்னை காவல்துறை வழக்குபதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும், உடனடியாக நடிகை மீராமிதுனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மீரா மிதுன் மீது குவியும் புகார்கள்