இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தலில் தோல்வி பயம் எதையும் செய்யத் தூண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பா.ம.க போட்டியிடும் தொகுதிகளில் அருவருக்கத்தக்க அரசியல் வன்முறைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி அரங்கேற்றி வருகிறது. ஜனநாயகத்தின் அடித்தளத்தை சிதைக்கும் நோக்கம் கொண்ட இத்தகைய சட்டவிரோத செயல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை; தண்டிக்கத்தக்கவையும் கூட.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வடிவேல் இராவணனை ஆதரித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும், நிர்வாகிகளும் வாக்கு சேகரித்து வருகின்றனர். செல்லும் இடங்களில் எல்லாம் அவர்களை மக்கள் வரவேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பட்டியலின மக்களும் தாங்கள் வாழும் பகுதிகளுக்கு வந்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அழைக்கின்றனர்.
அவர்களின் அழைப்பை ஏற்று பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளுக்கு வாக்கு கேட்பதற்காக செல்லும் போது, அவர்களை அந்த பகுதிக்குள் செல்ல விடாமல் தடுப்பது, தாக்குவது, அருவருக்கத் தக்க வகையில் திட்டுவது, வன்கொடுமைத் தடுப்பு பிரிவில் பொய்ப்புகார்களை கொடுப்பது உள்ளிட்ட செயல்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபடுகின்றனர். விழுப்புரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோலியனூர் காலனிக்கு ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் தலைமையிலான குழுவினர் வாக்கு கேட்டு சென்ற போது, அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் பரப்புரைக்காக இருசக்கர ஊர்திகளில் வந்தவர்களைத் தாக்கியதுடன், வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
கோலியனூர் பகுதியில் உள்ள மற்றொரு குடியிருப்புக்கு சென்ற போதும், அங்கு வரிசையாக பெண்களை நிறுத்தி வைத்து அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பரப்புரைக் குழுவினரை திட்ட வைத்துள்ளனர். தாதம்பாளையம் என்ற இடத்தில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை வரவேற்று அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை சாலையம்பாளையம் காலனியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பிடுங்கிப் போட்டு அட்டகாசம் செய்துள்ளனர். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துறவி, மூங்கில்பட்டு கிராமங்களிலும் அமைச்சர் தலைமையில் சென்ற பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்ட குழுவினரை வாக்கு சேகரிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதும் நடந்துதிருக்கிறது.
கடலூர் மக்களவைத் தொகுதியில் பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கண்டரக்கோட்டை என்ற இடத்தில் வாக்கு கேட்பதற்காக தலித் குடியிருப்பு வழியாக தொழில்துறை அமைச்சர் சம்பத் தலைமையில் வேட்பாளர் மருத்துவர் கோவிந்தசாமி மற்றும் அதிமுக கூட்டணியினர் நேற்று சென்றனர். அப்போது அவர்களை வழிமறித்த விடுதலை சிறுத்தைகள் பா.ம.க. கொடியை அகற்றி விட்டுத் தான் செல்ல வேண்டும் என்று தகராறு செய்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக மற்றும் பா.ம.க. தொண்டர்களை அமைச்சர் சம்பத் முன்னிலையில் தாக்கியுள்ளனர். அதேபோல், கடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தாணு நகர் என்ற இடத்திலும் விடுதலை சிறுத்தைகள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் நடத்திய தாக்குதலில் அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் காயமடைந்துள்ளார்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள பணப் பாக்கம் காலனியிலும் வாக்கு கேட்பதற்காக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் தலைமையில் செல்லும் போது பா.ம.க கொடியை அகற்ற வேண்டும் என்று கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தகராறு செய்தனர்; தொண்டர்களைத் தாக்கினார்கள். திருத்தணி தொகுதியில் உள்ள பள்ளிப்பட்டு பேரூராட்சியில் கீச்சலம் என்ற இடத்திலும் வி.சி.க இத்தாக்குதலை நடத்தியுள்ளது.
பட்டியலின மக்களில் பெரும்பான்மையினர் அதிமுக தலைமையிலான குழுவினர் தங்கள் பகுதிக்கும் வந்து வாக்கு கேட்க வேண்டும் என்று அழைக்கின்றனர். ஆனால், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தான் திட்டமிட்டு இந்த வேலைகளை செய்கின்றனர். அவர்களின் இந்த இழிவான செயல்களைத் தட்டிக் கேட்பவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் புகார் கொடுத்து சட்டவிரோதமாக வழக்குப் பதிவு செய்ய வைக்கின்றனர். வாக்கு கேட்டு வருபவர்களிடம் இவ்வாறு தகராறு செய்தால், அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு எதையாவது செய்வார்கள்; அதைப்பயன்படுத்திக் கொண்டு கலவரங்களை அரங்கேற்றலாம் என்பது தான் விடுதலை சிறுத்தைகளின் திட்டம் ஆகும். இப்போதே இப்படி செய்பவர்கள் தேர்தல் நாளில் இன்னும் மோசமான கலவரங்களை கட்டவிழ்க்கக் கூடும்.
இந்திய ஜனநாயகத்தின் வலிமையே அனைவருக்கும் வாக்குரிமை; அனைவரிடமும் வாக்கு சேகரிக்கும் உரிமை என்பது தான். அதேபோல், ஒரு கட்சியின் அடையாளமே அதன் கொடி தான். அதை அகற்றி விட்டுத் தான் வாக்குகேட்க வர வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? ஜனநாயக உரிமைகளை தடுக்கும் அதிகாரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதுவும் வாக்கு சேகரிக்க வரும்படி வேட்பாளரை வாக்காளர்களே அழைக்கும் நிலையில், அதைத் தடுப்பது மிகவும் மோசமான குற்றமாகும். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மட்டும் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக உள்ள திமுகவின் ஒரு பிரிவினர் இத்தகைய செயல்களுக்கு மறைமுகமாக துணை போகின்றனர். திமுகவில் உள்ள மற்றொரு பிரிவினர் உள்ளிட்ட திமுக கூட்டணியில் உள்ள வேறு எந்தக் கட்சியினரும் இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
வாக்கு சேகரிக்க விடாமல் தடுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரைத் தாண்டி, பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் வாக்கு சேகரிப்பது அதிமுக அணியால் முடியாதது அல்ல. பட்டியலின மக்களே தங்கள் பகுதிக்கு வாக்கு கேட்க அழைக்கும் போது, அதையேற்று அவர்கள் பகுதிக்கு சென்று வாக்கு சேகரிக்க அதிமுக அணியால் முடியும். மாறாக, எந்த வன்முறைக்கும் இடம் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக பொறுமை காக்கின்றனர். இதே அணுகுமுறையை அதிமுக அணியினர் தொடர வேண்டும்.
தோல்வி பயம் வாட்டுவதால் தான் இத்தகைய வன்முறைகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபடுகின்றனர். இது எதிர்பார்த்த ஒன்று தான். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்னும் கூடுதலான வன்முறையில் ஈடுபட்டாலும் கூட பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சியினர் எத்தகைய எதிர்வினையிலும் ஈடுபடக்கூடாது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் வன்முறைகள் குறித்து காவல் நிலையத்திலும், தேர்தல் ஆணையத்திடமும் முறைப்படி புகார் செய்து விட்டு, அமைதியான முறையில் அதிமுக - பா.மக. சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு கேட்க வேண்டும். நேர்மையான, சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.
இந்த நேரத்தில் இன்னொரு நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26-ஆம் தேதி பட்டியலின இளைஞர்களின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும், அச்சமுதாய தலைவர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையிலும் விவேகானந்தர்களாக இருங்கள்... வீணடிப்பவர்களாக இருக்காதீர்கள் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை நான் வெளியிட்டிருந்தேன். அதில்,‘‘பட்டியலின மக்களை தவறாக வழி நடத்துபவர்களை எண்ணித் தான் வருந்துகிறேனே தவிர, அம்மக்கள் மீது பாசமும், அவர்களின் நலனில் அக்கறையும் எனக்கு எப்போதும் உண்டு. எனவே, பட்டியலின தலைவர்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், அரசியல் சட்டப்படி வழங்கப்படும் இட ஒதுக்கீடு மற்றும் மத்திய மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளைப் பயன்படுத்தி அம்மக்கள் கல்வி, பொருளாதார அடிப்படையில் முன்னேறுவதையும், வேலைவாய்ப்பு பெறுவதையும் உறுதி செய்யும் வகையில் அவர்களை வழி நடத்துங்கள் & சாதிக்க வேண்டிய இளைஞர்களை சீரழித்து விடாதீர்கள் என்பது தான். மொத்தத்தில் இளைஞர் சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதில் விவேகானந்தராக இருங்கள்.... விலை மதிப்பற்ற அந்த சக்தியை வீணடிப்பவர்களாக இருக்காதீர் என்பது தான்’’ என்று கூறியிருந்தேன். அதையே மீண்டும் வலியுறுத்துகிறேன்.
தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினரின் பணிகள் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளன. அதேநேரத்தில் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தோல்வி பயம் காரணமாக கலவரத்தையும், வன்முறையையும் தூண்டுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து வேட்பாளர்களும் எந்தவிதமான தடையுமின்றி வாக்கு சேகரிப்பதை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்; விடுதலை சிறுத்தைகள் அளிக்கும் பொய்யான புகார்களின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவதையும் தேர்தல் வரை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.