இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வருமான விக்னேஸ்வரனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், " இலங்கையில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்தோம். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்தோம். இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் என இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கூறினார். ஆனால், அதுபோன்று இந்திய அரசு அளிப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால் தான், அதனை நாங்கள் எதிர்த்து வருகிறோம். நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி., ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி உள்ளனர் எனக் கூறியுள்ளது. அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க மாட்டார்கள். அதனால்தான் இரட்டைக்குடியுரிமையை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.
இரட்டைக் குடியுரிமைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடவில்லை. தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொண்டாடாது. ஆனால், அதே நேரத்தில் அவர்களின் வீடுகளில் தனிப்பட்ட முறையில் கொண்டாடலாம். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பொங்கல் பண்டிகையின் போதும் வாசலில் கோலம் போடும் பெண்கள் சிஏஏ வேண்டாமென கோலம் போடுவர். உள்ளாட்சித் தேர்தலில் சிறிய சிறிய மனக்கசப்புகள் ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றுதான். காங்கிரஸ் எழுப்பிய பிரச்னை குறித்து பெரிதுபடுத்த வேண்டாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: கேரள எல்லையில் 4 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்