சென்னை: இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் உள்ள முக்கியமான 50,000 பேரின் தொலைபேசி அழைப்புகள் உளவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்தியாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், முக்கிய நபர்கள், பத்திரிக்கையாளர்களின் அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தன.
நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிராக அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து குரல் எழுப்பினர். இதனால், முக்கிய மசோதாக்கல் எதும் நிறைவேற்றப்படாமல் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றம் முடிக்கப்பட்டது.
என்.ராம் வழக்கு
பெகாசஸ் விவகாரம் குறித்து ஒன்றிய அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, மூத்த பத்திரிக்கையாளர்கள் என். ராம், சசிக்குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன், இஸ்ரேல் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் இயக்குநர், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, முன்னாள் உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திருமாவளவன் கடிதம்
அதில், "ராணுவ தர கண்காணிப்பு மூலமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசியல் கட்சியினர், பத்திரிக்கையாளர்கள் ஒட்டுகேட்கப்பட்டுள்ளனர். பெகாசஸ் மென்பொருளை ஒட்டுகேட்க இந்திய அரசு பயன்படுத்தியதா? இல்லையா? என விளக்கம் அளிக்க வேண்டும்.
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை சட்டத்தின் படி ஒட்டு கேட்பு விவகாரத்தில் முன்னாள், தற்போதைய உள்துறை செயலாளர்களுக்கு தொடர்பு இருப்பதால் அவர்கள் மீது நீதிமன்ற வமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்க வேண்டும்.
நீதிபதிகள், நீதித்துறை அலுவலர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்பு என்பது அறிவிக்கப்படாத 'உள்நாட்டு போர்'. நீதித்துறை கண்காணிப்பு என்பது மக்கள் அதன் மீது கொண்டுள்ள நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'சமூக ஊடகங்கள் கண்காணிப்பு அச்சுறுத்தல்: பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கு' - திருமா கண்டனம்