சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் விக்ரமன். இவர் செய்தித்துறையில் நெறியாளராக பணியாற்றிவிட்டு, விசிகவில் இணைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் போட்டியாளராக இருந்த இவர், அந்த போட்டியில் வெற்றியடைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாம் இடம் பிடித்தார்.
ஜாதி ரீதியாக வாக்களித்ததால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டதாக அப்போது பேசு பொருளாகியது. பல்வேறு சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் குரல் கொடுத்து வந்த இவர், சமீபத்தில் கலாஷேத்ரா விவகாரத்தில் நேரடியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கு ஆதரவு கொடுத்தார்.
இந்தநிலையில், காதலித்து தன்னை ஏமாற்றியதாகவும், ஜாதியை கூறி இழிவுபடுத்தியதாகவும் பெண் வழக்கறிஞர் ஒருவர், விக்ரமன் மீதான தனது குற்றச்சாட்டுகள் குறித்து கடந்த ஏப்.19ஆம் தேதி விசிக தலைவர் திருமாவளவனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த பெண் வழக்கறிஞர் கொடுத்த குற்றச்சாட்டு கடித விவகாரம் விசிகவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண் வழக்கறிஞர் திருமாவளவனிடம் சமர்பித்த கடிதத்தில், "விக்ரமனும் நானும் நட்பாக பழகி வந்தோம். நான் லண்டனுக்கு சென்ற பிறகு என்னை காதலிப்பதாக கூறினார். அவருக்கு முற்போக்கு அரசியல் பிடிக்கும் என்பதால் நானும் அவரது காதலை ஏற்றுக்கொண்டேன். ஆனால் நாங்கள் காதலித்த இந்த 3 ஆண்டுகளில் மோசமான வார்த்தை பேசி விக்ரமன் என்னை திட்டியுள்ளார்.
எனக்கு கிடைத்த ஸ்காலர்ஷிப் குறித்தும், சாதி ரீதியாக கீழ்த்தரமான சொற்கைளை பயன்படுத்தினார். கணவன் மனைவி போல் வாழ்ந்து வருவது போல சூழலை உருவாக்கி என்னை அதிக பணம் செலவழிக்க வைத்தார். இதுபோல உளவியல் ரீதியாக சிக்கல் ஏற்படுத்தி உள்ளார். ஒரு உச்சநீதிமன்ற வழக்கறிஞராக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட என்னை இதுபோன்று கீழ்தரமாக நடத்துகிறார் என்றால் மற்ற சாதாரண பெண்களின் நிலையை என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை. மேலும் விக்ரமன் மீது காவல்துறையில் புகார் அளிக்க உள்ளேன். நீங்களும் கட்சி ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, பெண் வழக்கறிஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசிகவில் துணை செய்தி தொடர்பாளராக இருக்கும் விக்ரமனை விசாரிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழுவில் துணைப் பொதுச் செயலாளர் கவுதம சன்னா, அமைப்புச் செயலாளர் நீலா சந்திரகுமார், மாநிலச் செயலாளர் (தொழிலாளர் விடுதலை முன்னணி) கனல்விழி, பேராசிரியர்கள் சுந்தரவள்ளி, செம்மலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக 15 நாட்களில் விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை திருமாவளவனிடம் சமர்பிக்க இருக்கின்றனர்.