சென்னை: சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி மறைவுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச்செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,
'மருத்துவம் வழங்கப்படாமல், மோடி அரசு செய்த ஒடுக்குமுறையால் ஸ்டேன் சுவாமியின் உயிரிழப்பு நேர்ந்திருக்கிறது.
திட்டமிட்ட அரச பயங்கரவாத நிகழ்வாக இது நடந்திருக்கிறது. இதனை இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஸ்டேன் சுவாமி மீது வழக்கு என்பது புனைந்த ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு. மாவோயிஸ்ட்களுடன் தொடர்புடையவர் என்று பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கியதால் உயிரிழந்திருக்கிறார். அவரின் உயிரிழப்புக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்' என்றார்.
திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
'ஆதிவாசிப் பட்டியலின மக்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர், ஸ்டேன் ஸ்வாமி. கொலைகார ஆட்சிதான் பாஜக ஆட்சி. இது மரணம் அல்ல. பாஜக நடத்திய படுகொலை. அத்தகையவர்களை நீதிமன்றத்துக்கு முன்னர் குற்றவாளிகளாக நிறுத்த வேண்டும்.
உபா சட்டத்தின்கீழ் கைது செய்த அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். உபா சட்டத்தையே வாபஸ் பெற வேண்டும். வருகிற காலத்தில் விரிவடைந்த போராட்டத்தையே முன்னெடுப்போம்' என்றார்.
இதையும் படிங்க: