சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நீட் விலக்கு தீர்மானம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று(ஜன.8) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நீட் விலக்கு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திமுக கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நீட் தேர்வு விலக்கு தீர்மானம் கொண்டு வந்தது. அப்போதே பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.
பாஜக சார்பில் நீட் விலக்கு தீர்மானத்தில் உடன்பாடில்லை என தெரிவித்து வெளிநடப்பு செய்தேன். நீட் தேர்வு மாநில அரசின் உரிமையை பறிப்பது, மாநில சுயாட்சிக்கு எதிரானது. ஒன்றிய அரசால் மாநில அரசுகளின் மீது நீட் தேர்வு திணிக்கப்பட்டது எனத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் நீட் தேர்வு
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வினால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படுகிறது என்பது 100 சதவீத உண்மைக்கு புறம்பானது. புதிதாக 17 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் நலனை 7.5 சதவீத இட ஒதுக்கீடு பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வு தொடர்ந்து நடைபெற வேண்டும்.
12 வருடங்களாக பாடத்திட்டம் மாற்றாததே நீட் தேர்வில் மாணவர்கள் பாதிக்கப்படுவதற்கு காரணம். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் தேசிய சராசரியை விட அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வினை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை.
அரசியல் கட்சி தலைவர்கள் எத்தனை பேர் மருத்துக் கல்லூரிகள் நடத்தி வருகின்றனர் எனக் கேள்வி எழுப்பிய அவர், நீட் தேர்வுக்கு முன்பாக அவர்கள் மாணவர்களிடம் வசூலித்த கட்டணம் என்ன என்பது குறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் எந்த வரையறையும் இல்லாமல் கட்டணம் வசூலித்ததை நீட்தேர்வு தடுத்துள்ளது. மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டி உயிரிழப்புக்கு காரணமாக யாரும் அமைய வேண்டாம். உணர்ச்சி அரசியல் அத்தியாயத்தை மீண்டும் தொடங்க வேண்டாம்" எனத் தெரிவித்தார்.
வேறு நோக்கமாக பார்க்க வேண்டாம்
உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்பான கேள்விக்கு, சந்திக்க அனுமதி அளிப்பது அவர்களின் அலுவலக நடைமுறை விஷயம். கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நிலைமை சரியான பின் உள்துறை அமைச்சர் நேரம் ஒதுக்க வாய்ப்பு உள்ளது. இதை வேறு நோக்கமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை.
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நீட் தேர்வு தொடர்பான சாதக பாதகங்களை ஆராயவே அமைக்கப்பட்டது. ஆனால் பாதங்களை மட்டுமே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டம் முன்வடிவில் ஆளுநருக்கு விளக்கங்கள் தேவைப்பட்டிருக்கலாம், சந்தேகங்கள் இருந்திருக்கலாம் அதனால் கூட குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் வைத்திருக்கலாம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'- மு.க. ஸ்டாலின்