சென்னை கோயம்பேடில் உள்ள பாஜக மாநிலத் தேர்தல் அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்தது வருத்தமளிக்கிறது. தேமுதிக மீண்டும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதிமுக இதனைச் சுமுகமாகப் பேசி தேமுதிகவை வெளியே செல்லாமல் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு கட்சியும் பலத்தைக் காட்டி அவர்களுக்கான தொகுதி கேட்பது சகஜம்தான். பாஜக போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும். எங்கள் கூட்டணி அரசு ஆட்சியமைக்க வேண்டும். தொகுதிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டன.
ஓரிரு நாள்களில் அறிவிப்பு வெளியாகும். திமுகவுக்கு ஆதரவாக வரும் கருத்துகணிப்புகளை முழுமையாக ஏற்க முடியாது. அதிமுக கூட்டணி வெற்றிபெறும் எனவும் சில நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு வெளியிடுகின்றன.
குறுகிய காலத்தில் தேர்தல் என்பது அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும். பெண்களின் பாதுகாப்பில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு சிறந்த மாநிலம்தான். ஆனாலும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது.
இதில் அரசுக்கு மட்டுமல்ல நமக்கும் பொறுப்புள்ளது. பெண்கள் எந்த நிலைக்கும் சென்றாலும் பார்வையின் வக்கீரம் இருக்கும் என்பது ஐபிஎஸ் அலுவலரின் சம்பவத்தின் மூலம் தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் அலுவலருக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும்" என்றார்.