தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், இதுவரையில் போக்குவரத்துக்கான தடை விலக்கப்படவில்லை. இந்நிலையில் போக்குவரத்துக்கான தடையை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோ கூறுகையில், ''கரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த 5 மாதங்களாக பொது ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. வருமானத்திற்கு வழியின்றி உள்ள மக்களுக்கு இந்த ஐந்து மாதங்களில் அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே உதவித்தொகையாக அளித்தது. நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருள்கள் வழங்கியது. ஆனால், அவை போதுமானதாக இல்லை.
அதேபோல் மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்தை நிறுத்தி, இ-பாஸ் வாங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. ஆனால், கடந்த ஐந்து மாதங்களில் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த 47 லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கவில்லை.
கர்நாடக அரசு அனைத்துத் தடைகளையும் விலக்கிக் கொண்டு விட்டது. மத்திய அரசு கேட்டுக்கொண்டபடி புதுச்சேரி மாநில அரசு, தனது எல்லைகளைத் திறந்து விட்டது. தமிழ்நாட்டை விட மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்லியில், ஒரு மாதத்திற்கு முன்பே அனைத்துத் தடைகளும் விலக்கப்பட்டு விட்டன. இப்போது அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது.
எனவே, அனைத்துத் தரப்பு மக்களின் நலன்கருதி, தமிழ்நாடு அரசு மாநிலத்திற்கு உள்ளே போக்குவரத்து முடக்கத்தை நீக்க வேண்டும். அரசுப் பேருந்துகளை கட்டுப்பாடுகளுடன் இயக்க வேண்டும். செப்டம்பர் 1 முதல் பேருங்கள் இயக்கப்படுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுகவினர் மீதான குட்கா வழக்கு: உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அதிரடி!