இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவக் கோட்பாட்டை உலகிற்கு அளித்த திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகின்றது. ஆனால், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மனு தருமத்தை நிலைநிறுத்தி, மனித நீதியைக் குழிதோண்டிப் புதைத்து வரும் சனாதனக் கூட்டம், திருவள்ளுவரை தம்வயப்படுத்த முனைந்து நிற்கின்றது.முப்பால் வழங்கிய செந்நாப் போதார் திருவள்ளுவரை, ‘சீவலப்பர்’ என்று பெயர் சூட்டிய இக்கூட்டம், திருக்குறளையே ‘ஆரியச் சித்தாந்தச்’ சிமிழுக்குள் அடக்கிவிட ஆயிரம் ஆண்டுகளாக முயற்சி செய்தது.
இன்று அரசியல் அதிகாரத்தைக் கைக்கொண்டு இருக்கின்ற ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் தமிழ்நாட்டில் கால் ஊன்ற திருவள்ளுவரை ஒரு கருவி ஆக்கத் துடிக்கின்றன. கடந்த 2019 நவம்பரில், தமிழ்நாடு பா.ஜ.க. ‘ட்விட்டர்’ பக்கத்தில் காவி உடையில் விபூதி அணிந்த திருவள்ளுவர் படத்தை வெளியிட்டார்கள். இந்துத்துவ சனாதனக் கூட்டத்தின் கைப்பாவை ஆகிப்போன அ.தி.மு.க. அரசு, கடந்த 2020, டிசம்பரில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் கல்வித் தொலைக்காட்சியில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, அவருக்குக் காவி வண்ணம் பூசும் திருப்பணியைச் செய்தது. பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளத்தில் நஞ்சை விதைக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தமிழ்நாடே கொந்தளித்துக் கண்டனம் தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது சி.பி.எஸ்.இ. 8 ஆம் வகுப்பு பாட நூலில் திருவள்ளுவரை ‘உச்சிக் குடுமி’யுடன் சித்தரித்து படம் வெளியிட்டு, இழிவுபடுத்தி உள்ளனர். இச்செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியது.
திருவள்ளுவர் படம் வரைந்து, நாகேஸ்வரபுரத்தில் ஒரு இல்லத்தில் வேணுகோபால் சர்மா வைத்து இருந்தபோது, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், டாக்டர் கலைஞர் உள்ளிட்டத் தலைவர்கள் பார்வையிட்டுப் பாராட்டினார்கள். அந்த உருவப்படம், 1964 மார்ச் 23 ஆம் தேதி தமிழ்நாடு சட்டபேரவையில் அப்போதைய முதலமைச்சர் பக்தவச்சலம் முன்னிலையில் குடியரசுத் துணைத் தலைவர் ஜாகீர் உசைன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசால் ஏற்பு அளிக்கப்பட்ட திருவள்ளுவரின் உருவப்படம், தமிழ்நாடு அரசு அலுவலகங்களிலும், அரசுப் பேருந்துகளிலும் இடம் பெறச் செய்யப்பட்டது என்பது தான் வரலாறு. திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி, உச்சிக் குடுமி வைத்து, ஆரிய சிந்தாந்தவாதி ஆக்கிவிடத் துடிக்கும் சனாதனக் கூட்டத்தின் முயற்சி முறியடிக்கப்படும். மத்திய அரசு உடனடியாக சி.பி.எஸ்.இ. பாட நூலில் வெளியிட்டுள்ள திருவள்ளுவர் படத்தை அகற்றி, தமிழ்நாடு அரசு ஏற்பு அளித்த திருவள்ளுவரின் திருஉருவப் படத்தை இடம்பெற செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:திமுகவினர் மிரட்டுவதாக ஒன்றிய கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு!