இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "02.11.2018 அன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பத்திரிகையாளர்களிடம் உரையாடுகின்றபோதும், இதே கருத்தினை வலியுறுத்திக் கூறினார். நீதிமன்ற நடவடிக்கைகளை, வழக்கறிஞர்களின் வாதங்களை, தீர்ப்பு ஆணையின் விவரங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இந்த முயற்சி பெரிதும் பயன்தரும் என்பதில் ஐயமில்லை.
இதன் விளைவாக ஆங்கிலம் தவிர இந்தி, கன்னடம், தெலுங்கு, அஸ்ஸாமி, ஒடியா என ஐந்து மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மொழி மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது.ஆனால், அந்தப் பட்டியலில் உயர் தனிச் செம்மொழியாகவும், இலக்கண இலக்கியங்களை நிரம்பப் பெற்று உலகின் மூத்த மொழியாகவும் திகழும் தமிழ் மொழி இடம் பெறாதது நமக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிக்கிறது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் சிறப்பிடம் வகிக்கும் தமிழ் மொழிக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது தாங்க இயலாத மனவேதனையைத் தருகிறது. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மொழி மாற்றம் செய்யும் பட்டியலில் தமிழ் மொழியையும் பிற மாநில மொழிகளையும் இணைத்திடுமாறு மாண்புமிகு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை மதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.