சென்னை: இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கான நாள் குறித்து அறிவிப்பு வெளியானதைக் கேட்டு அதிர்ந்து போனேன். இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியைத் தொடர்பு கொண்டு, சென்னைக்கு அழைத்து வந்து, உயர் நீதிமன்றத்தில் வாதாடச் செய்து, தண்டனையை நிறுத்தி வைத்து தடை ஆணை பெற்றோம்.
அதற்குப் பின்னர், உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டின் அனைத்து அமர்வுகளிலும், ராம் ஜெத்மலானி கலந்துகொண்டு அருமையான வாதங்களை எடுத்து வைத்தார். இந்த வழக்கில், அவருடைய வாதங்கள் முதன்மையானவை. அத்தனை அமர்வுகளிலும், அவருடன் நான் பங்கேற்றேன். அதன்பிறகு, தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, விடுதலை செய்யும்படி பரிந்துரை செய்து பல ஆண்டுகள் கடந்தபோதிலும், முந்தைய ஆளுநரும், இன்றைய ஆளுநரும் அந்தக் கோப்பைக் கிடப்பில் போட்டு வைத்து இருந்தது மிகப்பெரிய அநீதியாகும்.
எந்தத் தவறும் செய்யாமல், இந்த இளைஞனுடைய இளமைக்கால வாழ்க்கை, சீர்குலைக்கப்பட்டு விட்டது. 31 ஆண்டுகளாக, இந்த ஏழு பேரும் துன்ப இருளில் வாடி வதங்கிவிட்டார்கள். இழந்ததை இனி அவர்கள் மீண்டும் பெற முடியாது. இப்போது, உச்ச நீதிமன்றம் நீதியை நிலைநாட்டி இருக்கின்றது; மகிழ்ச்சி. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போலவே, மற்ற ஆறு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பேரறிவாளன் விடுதலை; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு