ஈழத்தமிழர் இனப்படுகொலை விவகாரத்தில் ஐநா சபை நடவடிக்கை எடுக்கக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ”இலங்கையில் தமிழ் மக்கள்மீது நடத்தப்பட்ட போர், இனப்படுகொலை குறித்து, பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணையத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதையடுத்து 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் ஐநா பொதுப்பேரவை தீர்மானம் தொடர்பான அறிக்கை வெளியானது.
பின்னர் ஐநா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தில், “இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு இலங்கை அரசும் பொறுப்பேற்று நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும. இவற்றை இலங்கை அரசு கட்டாயமாகச் செயல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் மீது போர் தொடுத்து, லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த அண்ணனும் தம்பியும் இன்று இலங்கையில் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துவிட்டனர். ஈழத்தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைக்கு பன்னாட்டு விசாரணைக்கு இடம்தர மாட்டோம், உள்நாட்டு விசாரணையும் கிடையாது என்று இருவரும் கூறி வருகின்றனர்.
இலங்கை அரசின் நிலைப்பாட்டைக் கடுமையாகக் கண்டித்துள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையர் மிச்சேல் பேச்சலெட், “ஏற்கனவே ஒப்புக்கொண்ட விசாரணையைத் தவிர்த்துவிட்டு, மாற்று முயற்சி செய்தது வருத்தமளிக்கின்றது. இலங்கை அரசு நியமிக்கும் நீதிபதி விசாரணை ஆணைக் குழுவை ஏற்க முடியாது” என்று கூறினார்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் தொடருவதையும், ராஜபக்ச சகோதரர்கள் ஆட்சியின் கொடூரங்கள் மீண்டும் தலைதூக்கி வருவதையும் ஐநா மனித உரிமைகள் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவும், பன்னாட்டு நீதி விசாரணை நடத்தவும் ஐநா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... ‘எரிமலை ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்’ - வைகோ காட்டம்