கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ராணி சீதைமன்றத்தில் 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, மத்தியில் ஆட்சி வகித்த காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்த திமுகவும் தான் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் துரோகம் இழைத்துவிட்டதாகவும் பேசினார். மேலும் அவர், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக, வைகோ மீது தேச துரோகம், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கானது, எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. தற்போது, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றப் பத்திரிகை தாக்கல் தொடங்கி, குற்றச்சாட்டுப் பதிவு அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பது சாட்சிகளிடம் விசாரணை, சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம், சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள், எழுத்துப்பூர்வமான வாதங்கள் என அனைத்து நடைமுறைகளும் முடிந்த நிலையில், இன்று சிறப்பு நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதில், இந்த வழக்கில் வைகோ மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவரை குற்றவாளி என்பதால், ஒராண்டு சிறை தண்டனையும், ரூ. 10ஆயிரம் அபராதம் விதித்தார்.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் வைகோவிற்கு ஒராண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இல்லை. ஆகையால் அவர் மாநிலங்களவை எம்.பி ஆவதில் எந்த சிக்கலும் கிடையாது. என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.