கத்தாரின் தோகா நகரில் 23ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. அதில் பெண்கள் பிரிவின் 800 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார். நடப்புத் தொடரில் இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்த அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்த வாழ்த்துச் செய்தியில், “கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகின்ற ஆசிய தடகளப் போட்டிகளில், திருச்சியைச் சேர்ந்த கோமதி, இந்தியாவுக்கு முதலாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
அவருக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 2013 முதல் பல்வேறு பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வரும் கோமதி, தொடக்கத்தில் பல தோல்விகளைச் சந்தித்தாலும் மனம் தளராமல் தனது கடின முயற்சியால் இன்று சாதனை படைத்து இருக்கின்றார். அதோடு தனது சொந்த வாழ்விலும் பல இன்னல்களைச் சந்தித்த அவர் வருமானவரித் துறை அலுவலராகவும் திகழ்கின்றார்.
கோமதியின் வாழ்க்கையும் சாதனையும், தமிழ்நாடு மகளிருக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாக இருக்கின்றது. அவருக்கு, தமிழ்நாடு அரசு உரிய மதிப்பு அளித்துச் சிறப்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.