சென்னை: தாம்பரம் சானிடோரியம் காச நோய் மருத்துவமனையில் ரூபாய் 2 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ள ஆய்வகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "உலகில் காச நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 25 சதவீதத்தினர் இந்தியாவில் உள்ளனர். தமிழ்நாட்டில் 38 ஆயிரம் பேர் காச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் ரூபாய் 2 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ள காச நோய்க்கிருமி கட்டுப்பாட்டு ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டில் நடமாடும் காச நோய் கண்டுபிடிப்பு எக்ஸ்ரே ஊர்தி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மீண்டும் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது 88000 டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன.
தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும், 90 சதவீதம் தடுப்பூசிளை ஒன்றிய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயாராக உள்ளனர், ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது. சென்னையில் உள்ள ஒன்றிய அரசின் கிடங்கில் இருந்து இரண்டு லட்சம் தடுப்பூசிகளை தற்போது வழங்குவதாக ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அது கிடைத்தவுடன் மாவட்டங்களுக்குப் பிரித்து அளிக்கப்படும்.
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி வளாகத்தை ஒன்றிய அரசு திறந்தால் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் தடுப்பூசி வழங்க முடியும். ஜூலை மாதத்தில் 71 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வர உள்ளன.
தடுப்பூசி இல்லை என மக்கள் போராட வேண்டாம். அவர்களுக்கான தடுப்பூசியை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும். டெல்டா வைரஸ் கண்டறிவதற்கான சோதனைக் கூடம் விரைவில் தொடங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டரசின் தலைமைப் பொறுப்புகளில் தமிழ்ப் பெருமக்கள்!'