சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒன்றிய அரசிடமிருந்து தேவையான தடுப்பூசிகள் முழுமையாக வரவில்லை என்றும் தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.கோரிக்கையை ஏற்ற ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிகளை அனுப்பியது.
தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசிகள் போட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து, சிறப்பு முகாமில் அதிகளவில் பொதுமக்கள் கூடுகின்றனர்.
ஆனால், தடுப்பூசிகள் இல்லாமல் பல இடங்களில் முகாமங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால், தடுப்பூசிகள் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதினார்.
சென்னை வந்த தடுப்பூசிகள்:
இந்நிலையில், ஜுலை 10ஆம் தேதி புனேவிலிருந்து பெங்களூரு வழியாக 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. 2ஆவது நாளாக நேற்று (ஜூலை 11) புனேவிலிருந்து ஹைதரபாத் வழியாக சென்னைக்கு 31 பெட்டிகளில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 410 தடுப்பூசிகள் வந்தன.
அவை விமான நிலையத்திலிருந்து தேனாம்பேட்டையிலுள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதேபோல் 14 பெட்டிகளில் 1 லட்சத்து 68 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெரியமேட்டிலுள்ள ஒன்றிய சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.
மேலும், தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு உடனே பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் - சென்னை மாநகராட்சி