திருச்சி தெற்கு மாவட்டக் கழக செயற்குழுக்குழு கூட்டம் இன்று (மே30) நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் வரும் ஜூன் 3ஆம் தேதி 'முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்த நாள் விழா'வை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது உதயநிதி ஸ்டாலினை விரைவில் அமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கழக செயல்வீரர்கள் கூட்டங்களில் எனக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக் கழகத்திற்கு அனுப்பிவைத்திருப்பது குறித்து அறிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
கழகம் வழங்கிய வாய்ப்பில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகத் தொகுதி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள் பணியையும்,கழகத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமிடல்களுடன் பாசறைக்கூட்டங்கள் நடத்துவது, நலத்திட்ட பணிகளில் ஈடுபடுவதென பலவற்றுக்குமான பயணங்களுக்குத் தயாராகி வரும் சூழலில், என் மீதுள்ள அன்பின் காரணமாக, அமைச்சர் பொறுப்பு அளிக்கத் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் தனது தொடர் பணிகள் மீதும், முன்னெடுப்புகள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் என்றென்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க திமுக தீர்மானம்!