சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்நிலையில், சிறை விதிகளின் படியும், நன்னடத்தை அடிப்படையிலும் வரும் 2021 ஜனவரி 27ஆம் தேதி சசிகலாவின் தண்டனை காலம் முடிய இருப்பதால், அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத்திற்கான 4 வரைவோலைகளை பெங்களூருவில் உள்ள 34ஆவது நகர உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று (நவ.17) தாக்கல் செய்யப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், 34ஆவது நகர உரிமையியல் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தப்பட்டதாகவும், அதை ஏற்று சிறை நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என வி.கே. சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜ செந்தூர் பாண்டியன் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
வி.கே. சசிகலா தரப்பு வாதத்தை ஏற்ற நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட அபராதத் தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டதாகவும், அதற்கான ரசீதை பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்துக்கும் இன்று (நவ.18) அனுப்பி வைத்தனர். இதையடுத்து பேசிய ராஜ செந்தூர் பாண்டியன், 'அபராதம் செலுத்தப்பட்டுவிட்டதால் சசிகலாவின் விடுதலை (remission) குறித்து நீதிமன்றத்தில் முறையிடுவதில் இனி எந்த தடையும் இல்லை' எனவும் தெரிவித்தார்.