ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு (UPSC Prelims Exam 2020) நாடு முழுவதும் உள்ள 72 நகரங்களில் அமைக்கப்பட்டு உள்ள 2 ஆயிரத்து 569 தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகின்றது. இந்தத் தேர்வினை 10.58 லட்சம் பேர் எழுத உள்ளனர். ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு கரோனோ பரவல் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (அக்., 4) தேர்வு நடைபெற இருக்கின்றது. இந்தத் தேர்வை முன்னிட்டு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தேர்வுக்கு வரும் மாணவர்கள் சனிடைசர் கொண்டுவர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல விடைகளை குறிப்பதற்கு கருப்பு நிற மையை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு வளாகங்களை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
தகுந்த இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும். ஒரு மேசையில் 2 பேர் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.