சென்னை: கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அப்போது, திமுக தலைவர்கள் குறித்த பல குற்றச்சாட்டுக்களையும் அண்ணாமலை முன் வைத்தார்.
இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தரப்பில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல், திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.ஆர்.பாலு, கடந்த மே 12ஆம் தேதி சைதாப்பேட்டை 18வது நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு தாக்கலின்போது, மூத்த வழக்கறிஞர் நெல்சன் உள்ளிட்டோரும் நேரில் ஆஜராகி இருந்தனர்.
இந்த நிலையில், இன்று (ஜூன் 15) இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றம், “இந்த வழக்கு விசாரணை தொடர்பாக அடுத்த மாதம் 14ஆம் தேதி (ஜூலை 14) அண்ணாமலை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டு உள்ளது.
முன்னதாக, டி.ஆர்.பாலு தாக்கல் செய்த அவதூறு வழக்கில், “கடந்த 1957ஆம் ஆண்டு முதல் நான் அரசியலில் இருந்து வருகிறேன். நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்து உள்ளேன். அது மட்டுமல்லாமல், கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறேன். எனவே, எனக்கு சமுதாயத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் நற்பெயரும், மரியாதையும் உள்ளது.
ஆனால், அதனை சீர்குலைக்கும் விதமாகவும், களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறான, ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளை எனக்கு எதிராக சுமத்தி உள்ளார். அதேபோல், திமுகவினர் ஊழல் செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து உள்ளதாகவும் பொய்யாக குற்றம் சாட்டி உள்ளார்.
தற்போது நானும், தொழில் துறை அமைச்சராக இருக்கும் என் மகன் டிஆர்பி ராஜாவும் மட்டுமே பொது வாழ்வில் உள்ளோம். மற்றபடி, என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் பொது வாழ்க்கையில் ஈடுபடவில்லை. ஆனால், நாங்கள் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்து உள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
அவ்வாறு அவர் கூறும் நிறுவனங்களில், 3 நிறுவனங்களில் மட்டும் நான் சிறு முதலீட்டை செய்துள்ளேன். அதேநேரம், மற்ற நிறுவனங்களில் பங்குதாரராகவும் இல்லை. இந்த நிலையில், பொய்யான குற்றச்சாட்டைக் கூறி, எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
இது தவிர அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன்னதாக, திமுக தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு, தான் கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்க முடியாது என்றும், வழக்கைச் சந்திக்க தான் தயார் என்றும் அண்ணாமலை தரப்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: V Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த வழக்கில் கைது.. முழு பின்னணி என்ன?